Saturday, January 14, 2017

உழவர் தினம் கொண்டாடுவது ஏன்?


இளம் தலைமுறையினரே உங்களுக்காகத்தான்...

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
இது நம் அய்யனின் அற்புத குறள்.

உழவர்கள் பிரதிபலன் பாராது உழைப்பால் விளைவிக்கும் உணவு தானியங்களை பிறரும் பெற்று பயன்பெறும் வகையில் உபசாரம் செய்வதே அவர்களது தலையாய பணியாக உள்ளது. இதுவே வேளாண்மையின் சிறப்பு.


பழங்காலத்தில் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக இருக்கக் காரணம் அவர்களது விருந்தோம்பல் தான். இது தான் அவர்களை 100 ஆண்டுகள் வரை ஏன் அதற்கு மேலும் கூட வாழ வைத்துள்ளது.

தற்போது நவநாகரீகம் தான் வளர்ந்து விட்டதே ஒழிய மக்களிடம் அந்த பாரம்பரிய பண்பாடுகள் குறைந்து தான் வருகிறது. மேலும் உரங்கள் மற்றும் கலப்பட உணவுகளை உண்பதால் பல்வேறு வகையான நோய்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இதனால் ஆரோக்கியம் குறைந்து சொற்ப வயதிலேயே இறந்து விடுகின்றனர். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும் என்ற தலையாய கருத்தை யாரும் மதிப்பதே இல்லை. எடுத்ததற்கெல்லாம் ஆசை. அடுத்தவன் அதை வாங்கிட்டானே, இதை வாங்கிட்டானே நாம் இன்னும் வாங்கவில்லையே? என மனைவி கணவனிடம் முறையிட, கேள்வி கேட்க விடை தெரியாது விழி பிதுங்குகிறான். இதனால், அவன் என்ன செய்வது என அடுத்தவரிடம் கையேந்தி, அதனால் கடன்காரனாகி விடும் பரிதாப சூழல். இது வீட்டிற்கும் தெரியாமல், இறுதியில் தற்கொலையில் முடிந்து விடுகிறது.

இனி இதுபோன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறாது இருக்க நாம் அனைவரும் பண்டைய பாரம்பரியத்தை மீண்டும் பின்பற்றுவோம். அதற்கான அடையாளமாகத் தான் உழவர் தினமே வருகிறது.
அந்த காலத்தில் இருந்த கூட்டுக்குடும்பம் இன்று இல்லையே ஏன்? நகர வாழ்க்கை, தனிக்குடித்தனம், நரக வாழ்க்கையாக மாறுவது ஏன்?
இதற்கெல்லாம் ஒரே தீர்வு பழைமை பண்பாட்டை மாறாமல் கட்டிக்காத்து கடைபிடிப்பதுதான்.
அந்தக்காலத்தில் பெண்கள் அம்மி, உரல், சலவை செய்வது என எல்லா வேலைகளுமே அவர்களுக்கு உடற்பயிற்சியாக அமைந்தது. ஆனால், இன்று எல்லாமே நவீனமயமாகி விட்டதால் சோம்பேறிகளாகி விட்டனர். அதனால் வாராத நோய்கள் எல்லாம் இதுதான் சரியான இடம் என்று எண்ணி வந்து குடியேறி விட்டது.

இனியும் இந்த அவலம் தீர வேண்டுமானால், பழந்தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, இளவட்டக்கல் , கபடி விளையாட்டுகளை ஆதரிப்போம். இனி ஒரு விதி செய்வோம். புதிய வீர தலைமுறையினரை தமிழ் வாசத்துடன் வளர்த்திடுவோம்.
நன்றி
பாரதிசங்கர்
முக்காணி

















 


0 Responses to “உழவர் தினம் கொண்டாடுவது ஏன்? ”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby