Monday, January 10, 2011

கடவுள் யாருக்கு சொந்தம்?

நமக்கு எது தேவை என்பது தெரிய வேண்டும். அதற்கு நமது திறமையை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்மால் எதைச் செய்ய முடியும். எதைச் செய்ய முடியாது என்பதை நாம் உணர வேண்டும். நாம் எப்போதும், பிறரைப் பற்றியே தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாம் எப்படி
இருக்கிறோம். நமது வாழ்க்கை நிலை எப்படி உள்ளது? அதை முன்னேற்ற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதைத் தவிர்த்து வீணாக அடுத்தவர்களைப் பற்றி எண்ணி எண்ணி நாம் ஏங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அவர் நம்மை விட எவ்வளவு இளமையானவர்? எவ்வளவு வசதியாக இருக்கிறார்? எத்தனை அழகான மனைவி அவருக்கு? ஏன் நமக்கெல்லாம் இப்படி கிடைக்கவில்லை? நம்மிடம் திறமை எதுவும் இல்லையா? என்று பல விஷயங்கள் நம்மை பாடாய் படுத்தும். அதை நாம் நமது மனதிற்குள் போட்டு தேவையில்லாமல் குழம்பிக் கொண்டிருக்கக்கூடாது. அவரது திறமை என்ன? அவரின் பின்புலம் எப்படிப்பட்டது? என்று எதுவும் நமக்குத் தெரியாது. நம் கண்ணுக்கு கவர்ச்சியான அவரின் வசதிகள் மட்டும் தான் தெரியும். அதனால் தான் இத்தனை குழப்பங்களும் நொடிப்பொழுதில் நமக்கு வந்து விடுகிறது. நமது செயல்களை நாம் சரியாக செய்து வரும்போது, அடுத்தவர்களைப் பற்றி நமக்கு ஆராய நேரம் இருக்காது.
நாம் துன்பப்படுவதற்கு காரணம் ஆசை மட்டும் அல்ல. ஆசை படுவதில் கூட எந்த தவறும் இல்லை. அதை எப்படி அடைய வேண்டும் என்று தெரியாமல் குழம்பித் தவிக்கிறோமே அதுதான் முக்கிய காரணம். ஆசைப்படும்போது தான் நாம் ஏதாவது ஒரு வகையில் முயற்சி செய்வோம். அதனால், சுறுசுறுப்பாக இயங்குவோம். இல்லாவிட்டால், மரம்போல் ஒரே இடத்தில் சோம்பேறியாய் இருந்து விடுவோம். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இருந்தும் என்ன பிரயோஜனம்? நாம் இன்னும் அப்படியே தானே இருக்கிறோம்? என்ன இருந்து என்ன பயன்? என்று எதிர்மறையாக சிந்திப்பதை விட்டு விடுங்கள். நாம் ஏதாவது தவறு செய்யும் போது நமது மனசாட்சியை கடவுளுக்கு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். அப்போது இதே புலம்பலை சொல்லுங்கள். எப்படி அர்த்தம் மாறுகிறது என்பதை உங்கள் இடத்தில் இருந்தே பாருங்கள். கடவுள் ஒருவருக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல என்பது உங்களுக்கே புரியும்.
நமக்கு எல்லாமே நினைத்த மாத்திரத்தில் நடந்து விட வேண்டும். ஆனால் அதற்காக எந்த ஒரு முயற்சியும் செய்யக்கூடாது. இப்படி இருந்தால் எப்படி நடக்கும்?
மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் என்று ஒரு பழமொழி உண்டு. அதை உங்களுடைய முயற்சிக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அதை மட்டுமே நம்பிக் கொண்டு சோம்பி இருந்து விடாதீர்கள். கவலைப்படுவதை விட்டுவிட்டு கவலைக்கு நீங்களே வலை விரிக்காதீர்கள். கவலையைப் போக்கும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கண்ணுக்கு கவலை மட்டும் தெரிகிறது என்று நினைக்காதீர்கள். அதில் கலையும் உள்ளது. கொஞ்சம் உற்றுப் பாருங்கள். துன்பங்களை கண்டு துவண்டு விடாதீர்கள். உங்களுக்கு வருவதெல்லாம் விலை கொடுத்து வாங்கியதாகவும் எடுத்துக் கொள்ளாதீர்கள். துன்பங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள். அவை தான் நாளைய முயற்சிகளுக்கு உங்களை வழிநடத்துபவை.வாழ்க்கையை ரசியுங்கள். வாழ்க்கை உங்களை ரசனையுடன் எடுத்துச் செல்லும்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

===

0 Responses to “கடவுள் யாருக்கு சொந்தம்?”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby