Monday, February 3, 2014

பாரதி கேட்ட வரம்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்!


என்று கேட்டான் பாரதி
அது மட்டுமா?

நல்லதோர் வீணை செய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி -எனைச்
சுடர்மிகு அறிவுடன் படைத்து விட்டாய்!

வல்லமை தாரோயோ, இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திட புரிகுவையோ?

என்றார் நம் மகாகவி- சரி
இப்போது நாம் கேட்போம்

சிறுமைகள் களைய வேண்டும்
சீற்றங்கள் குணத்தால் வேண்டும்
பார்வைகள் புதிதாய் வேண்டும்
பழையன கழிதல் வேண்டும்!

தொல்லைகளை வெல்ல வேண்டும்
கவலைகளை துறக்க வேண்டும்
மாற்றங்களில் வேட்கை வேண்டும்
சாதனைகளை தொடர வேண்டும்!

பிணிசூழா உடல்நலம் வேண்டும்
பணியாத தைரியம் வேண்டும்
மழைபோல் அன்பு வேண்டும்
மரம்போல் நட்பு வேண்டும்!

வாக்கினில் சுத்தம் வேண்டும்
வாகை நாம் சூட வேண்டும்
தோற்றத்தில் பொலிவு வேண்டும்
தேவைகள் குறைய வேண்டும்!

புதுயுகம் படைக்க வேண்டும்
புதுசக்தியாய் மாற வேண்டும்
கேள்விகள் பிறக்க வேண்டும்
பதில்களைத் தேட வேண்டும்!

பாரதியின் வழி நடக்க நாமும்
பாங்குடன் பழகிடல் வேண்டும்
சாதிகள் ஒழிய வேண்டும்
சரித்திரங்கள் படைத்திட வேண்டும்!

சரி இதற்கு என்ன வேண்டும்
இப்போதும் பாரதிதான் வேண்டும்!

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!

இனியொரு விதி செய்வோம்
அதை எந்த நாளுமே காப்போம்
இதை அன்றே சொன்னவர் மகாகவி
அதை நாமும் கேட்போம் அவர்வழி!

பாரதிசங்கர்
 

0 Responses to “பாரதி கேட்ட வரம் ”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby