Friday, December 24, 2010

ரசிகனின் பார்வையில் மன்மதன் அம்பு

தொழிலதிபர் மதனகோபால் அம்புசாக்ஷியைக் காதலிக்கிறார். நடிகையின் காதலில் சந்தேகப்படுகிறார். அதனால், அவர் போகும் இடங்களில் எல்லாம் அவரைக் கவனிக்க மேஜர் மன்னாரை அனுப்புகிறார். அம்புசாக்ஷியை வேவுபார்க்கும் மன்னார் அவர் நல்லவர்தான் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார். இதை ஏற்க மறுக்கிறார், மதனகோபால்.
 இதற்கிடையில் மேஜருக்கு கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள தன் நண்பருடைய சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது.

மதனகோபால் மன்னாருடைய வேவு வேலையில் திருப்தி அடையாததால், அவருக்கு பணம் தர மறுக்கிறார். என்ன செய்வது என்று தவிக்கும் மன்னார், நிலைமையை சமாளிக்க அம்புசாக்ஷியின் பின்னால் ஒருவன் சுற்றுவதாக கதை விடுகிறார். அந்த கதையின் நாயகனாகவும் அவரே நடிக்கிறார். இதனால் வரும் குழப்பங்களும், அம்புசாக்ஷியை யார் கைபிடிக்கிறார் என்பதையும் நகைச்சுவை கலந்து நமக்கு தந்திருக்கிறது மன்மதன் அம்பு.

மேஜர் மன்னாராக கமலும், மதனகோபாலாக மாதவனும், அம்பு சாக்ஷியாக திரிஷாவும் நடித்திருக்கின்றனர்.கதை, திரைக்கதை, வசனம், கவிஞர், பாடகர் என்று ஐந்து அவதாரங்களை எடுத்திருக்கிறார், கமல்.

தன் மனைவி விபத்தில் பலியானதை அம்புசாக்ஷியிடம் சொல்லி தவிக்கும் கமல், நம்மை நெகிழ வைக்கிறார். நட்புக்கும், காதலுக்கும் இடையே சிக்கித்தவிக்கும் கேரக்டரை அனாயாசமாக செய்திருக்கிறார். சண்டைக்காட்சியின் இறுதியில் கீழே விழுந்த குப்பைத்தொட்டியை போகிற போக்கில் நிறுத்தி வைத்து விட்டும் செல்லும்போது சமுதாயத்தின் மேல் அவருக்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது.

அறம் பேசாதே, அறம் செய்.வீரத்திற்கு அழகு மன்னிக்கிறதுதான், நேர்மைக்கு திமிர் தேவைதான் என்பது போன்ற அவரது வசனங்கள் நறுக்குத் தெறிக்கிறது. நீலவானம் என்ற பாடலை கமல் எழுதியதோடு, பாடும் அவரது குரல் மென்மையாக நம்மை வருடுகிறது.

திரிஷா அழகாகவும், முதிர்ந்த நடிப்பிலும் கண்ணுக்கு விருந்து படைக்கிறார். அவர் கமலுடன் சேர்ந்து நடித்த முதல்படம் இது. தன்னைப்பற்றி சந்தேகப்படும் மாதவனிடம் விவாதம் செய்யும்போதும், கமலுடைய மனைவி விபத்தில் பலியானதற்கு காரணம் தான்தான் என்று கமலிடம் சொல்ல முடியாமல் தவிப்பதிலும் ஜொலிக்கிறார்.

மாதவன் காதலியின் மேல் சந்தேகப்படும் கண்டிப்பான தொழிலதிபராக வலம் வருகிறார். தண்ணி போட்டுக்கொண்டு குளறியபடி பேசும் இவர், கமலுடன் சேர்ந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்.
படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது பிரம்மாண்டமான கப்பல். இந்தக் கப்பலில் உள்ள நீச்சல்குளம், கலைஅரங்குகள் நம்மை வியக்க வைக்கின்றன.

 மனுஷ்யநந்தனின் காமிரா கப்பலை மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, ரோம், இத்தாலி போன்ற நாடுகளின் அழகையும் விழுங்கியுள்ளது. உடை அலங்காரத்தை கவுதமி கச்சிதமாக செய்திருக்கிறார். தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசையில் தகிடுதத்தோம், நீலவானம், ஒய்யால போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.


சூரியா ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுச் செல்கிறார். சங்கீதா, ஓவியா, கரோலினா, ஊர்வசி போன்றவர்களும் நடித்துள்ளனர். நீலவானம் பாடலை பின்னோக்கி காட்சிப்படுத்தி கதைசொல்லி புதுமை செய்திருக்கிறார், கே.எஸ்.ரவிக்குமார். கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை நட்சத்திரங்களுடன் சேர்ந்து குதூகலமாக விளையாடி, குழந்தையாக ரசிக்கச் செய்து படத்துடன் ஒன்றச் செய்கிறது அவருடைய இயக்குனர் முத்திரை.

தெனாலி, பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, தசாவதாரம் படங்களைத் தொடர்ந்து கமல், ரவிக்குமார் கூட்டணி இந்தப்படத்திலும் வெற்றிக்கான முத்திரைகளை அழுத்தமாக பதித்துள்ளது. மன்மதன் அம்பு ஆறிலிருந்து அறுபது வரை பார்க்க வேண்டிய அன்பு.

2 Responses to “ரசிகனின் பார்வையில் மன்மதன் அம்பு”

பனித்துளி சங்கர் said...
December 24, 2010 at 10:17 PM

உங்களின் பார்வையில் மன்மத அம்பு சிறப்பு


பனித்துளி சங்கர் said...
December 24, 2010 at 10:30 PM

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !


Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby