Wednesday, January 12, 2011

பொங்கல் பண்டிகையின் தத்துவம்

"உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனம் செய்வோம். வீணில் உண்டு கழிப்போரை நிந்தனை செய்வோம்" என்பார், மகாகவி பாரதி. அவரது கூற்றை நிஜமாக்கி வருகின்றனர், நம் தமிழர்கள்.  உன்னதமாக அவர்கள் கொண்டாடும் பொங்கல் திருநாளின் மகிமையைப் பற்றி இங்கு  பார்ப்போமே...


உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பது மழை. சூரியன், மாடுகளுக்கு நன்றி சொல்வது  நமது கடமை. அதற்கு ஒரு விழா எடுத்தாக வேண்டும் என்ற உந்துதலால் உருவானதுதான் இந்த  பொங்கல்.
போகிப்பண்டிகை
அக்காலத்தில் மழைக்கடவுளான இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கோடு, போகி  திருநாளை இந்திரவிழாவாக மன்னர்கள் கடைபிடித்தனர். நாளடைவில் இந்திரனின் இன்னொரு  பெயரான போகி பண்டிகையாக மக்கள் கொண்டாடத் தொடங்கினர். இதனால் தான் வீடுகள்  சுத்தம் செய்யப்பட்டு, வெள்ளை அடிக்கப்படுகிறது. மனிதனின் அகமாகிய மனமும்  வீட்டைப்போல் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதைத்தான் இந்த பண்டிகை உணர்த்துகிறது.

தைப்பொங்கலின் தத்துவம்
தை முதல் நாளில் சூரியன் உதிக்கும் முன்பாக பொங்கலிட்டு, சூரியனை வழிபடுகின்றனர்.  பழையன கழிதல், உழைப்பின் சிறப்பு, இயற்கையை வணங்குதல் போன்றவற்றை நினைவுகூறும்  வகையில் தமிழர்கள் கொண்டாடும் திருவிழா பொங்கல் திருநாள்.
பஞ்சபூதங்களையும் வழிபட வேண்டும் என்ற தத்துவத்தைத்தான் பொங்கல் திருநாள் நமக்கு  நினைவூட்டுகிறது. அடுப்பு, பானை ஆகியவை மண்ணையும், பானையில் ஊற்றுகின்ற பாலும்,  நீரும் நீரையும், தீ உண்டாக்குவது நெருப்பையும், பொங்கல் மேலே பொங்கி ஆவியாக வருவது  வாயுவையும், பொங்கலை படையலிட்டு திறந்த வெளியில் வணங்குவது வானையும்  குறிக்கின்றன.
போகிக்கு 'போக்கு' என்று பொருள். நம்மிடம் உள்ள பழைய கெட்ட குணங்கள் ஏதும்  இருந்தால், அதை அழித்துவிட்டு நல்ல எண்ணங்களை வளர்த்து வாழ்வில் வளம் சேர்த்துக்  கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தைத்தான் போகிப்பண்டிகை உணர்த்துகிறது. போகியில்  பழைய பாழடைந்த துர்குணங்களைநீக்கிவிட்டு, மறுநாள் வரும் தமிழர்களின் திருநாளான  பொங்கல் முதல் புதிய மனிதராக மாற்றம் பெற்று மண்ணில் உலவ வேண்டும்.
மகர லக்னத்தில் சூரியன் இருப்பதால், மகர மாதம் என்றும், அம்மாதத்தில் கொண்டாடப்படும்  பண்டிகையை 'மகர சங்கராந்தி' என்றும் கொண்டாடுகிறோம். மறுநாள் மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மாட்டுப்பொங்கல் வந்தது எப்படி?
விவசாயிக்கு ஆண்டு முழுவதும் உற்ற துணையாக இருந்து விளைச்சலை பெருக்குவது  எருதுதான். சிவபெருமான் ஒரு தடவை தனது உற்சவ வாகனமான காளை பசவாவிடம், "நீ  பூலோகத்திற்கு போய் அங்குள்ளவர்களிடம் தினமும் எண்ணெய்க் குளியலும், மாதத்திற்கு  ஒருமுறை உணவும் சாப்பிட வேண்டும் என்று சொல்லிவிட்டு வா" என்று அனுப்பி வைத்தார்.  ஆனால், பசவாவோ, தினமும் உணவு சாப்பிடுங்கள், மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய்க்  குளியல் போடுங்கள் என்று பூலோகத்தில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டது. இதைக் கேட்டு  கோபமடைந்தார் சிவன். "ஜீவராசிகள் தினமும் சாப்பிட வேண்டுமானால், அதற்கு நெல்மணிகள்  வேண்டுமே-? நீ செய்த தவறுக்கு பரிகாரமாக, அவர்களிடம் போய் காலம் முழுவதும் பாடுபடு"  என்று சாபம் போட்டார். அதனால் தான் மாடு இன்று வரை மனிதனுக்கு மாடாய்  உழைக்கிறது. மாட்டுப்பொங்கல் அன்று எருதுவை வழிபட்டால், விவசாயம் செழிக்கும் என்பது  ஐதீகம்.
அன்றைய தினம் தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில்  ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு  போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறுகிறது.
தை மூன்றாம் நாளில் இளம் பெண்கள் ஆறு, குளக்கரை மற்றும் நீர்த் தேக்கம் நிறைந்த  சோலைகளில்  கூட்டாஞ்சோறு செய்து படைத்து வழிபாடு செய்கின்றனர். இதைக் கன்னிப்  பொங்கல் என்பர்.

காணும் பொங்கல்
கடைசி நாளான காணும்பொங்கல் அன்று கடற்கரை, பூங்காக்களில் கூட்டம் அலைமோதும்.  காணும் பொங்கலில் பெரியோர்களை வணங்குதலும், அவர்களின் அறிவுரைப்படி வாழ்வதும்  அவசியம். கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று விரதம் இருந்து காணும்பொங்கலை கொண்டாடுவர்.
கோனார்க், காஷ்மீர், ராஜஸ்தான், கும்பகோணம், திருக்கோஷ்டியூர், குஜராத் போன்ற  இடங்களில் உள்ள புகழ்பெற்ற சூரியகோவில்களில் தமிழர்கள் தான் முதலில் வழிபாடு  செய்துள்ளனர்.

கரும்பின் தத்துவம்
கரும்பின் அடிப்பகுதி, இனிப்பாகவும், நுனிப்பகுதி துவர்ப்பாகவும் இருக்கும். உழைப்பின்  அருமையை உணர்வோர்க்கு ஆரம்ப வாழ்க்கை ஒரே போராட்டமாக இருக்கும். ஆனால்,  கரும்பைப் போல் முதலில் இது துவர்ப்பாக இருந்தாலும், இறுதியில் சிறப்பாக இனிக்கும்.
மஞ்சள் இருக்கும் இடத்தில் மகாலெட்சுமி வாசம் செய்கிறாள். சிவனின் வலது கண்ணாக  சூரியன் இருக்கிறார். அதனால் தான் பொங்கல் திருநாள் அன்று இவை முக்கிய இடம்  பெறுகின்றன.

தைமகளின் சிறப்புகள்
சூரியன் தென்சுற்றில் இருந்து 6 மாத கால இடைவெளிக்கு பிறகு வடக்கு சுற்றில் நுழைகிற  தருணம் உத்திராயண புண்ணிய காலம். இதன் முதல் நாளில் தான் தனுசுராசியில் இருந்து மகர  ராசிக்கு சூரியன் இடம்பெறுகிறது.
அடுத்து வரும் 6 மாதகாலம் நீண்ட கதகதப்பான காலம். இந்த காலத்தில் தான் தேவர்கள்  உறக்கத்தில் இருந்து விழிப்பதாக கூறுவர்.
கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் விஷ்ணுவை நினைத்து தவம் இருந்த ஹேமா முனிவருக்கு சாரங்கபாணி உருவில் இறைவன் காட்சி அளித்து ஆட்கொண்ட தினம்.
மதுரை சுந்தரேஸ்வரர் கோவிலில் கல் யானைக்கு இறைவன் உயிர் கொடுத்து கரும்பு தின்ன வைத்த தினம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இந்த பொங்கல் திருநாள்.

பொங்கல் அன்று பொங்கும் பொங்கலைப் போல் இதைப் படிக்கும் எல்லோருடைய  உள்ளங்களும் தினமும் பொங்கி மகிழ்ந்திட எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
===

0 Responses to “பொங்கல் பண்டிகையின் தத்துவம்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby