Wednesday, January 12, 2011

பொங்கலோ பொங்கல்

(சிறப்பு கவிதை)

சீறி வரும் காளைகளும்
பாய்ந்து வரும் காளையரும்
மூடி வைத்த முத்தமிழை
முகம் திறந்து பார்க்கட்டுமே!


செந்நிறத்தில் மண் சிவக்கும்
நதியின் ஓசை சலசலக்கும்
நீரோடைகள் ஓடி வரும்
துள்ளி வரும் வெள்ளலையாய்..!

பள்ளிகொள்ள கண்துடிக்கும்
பரமசுகம் ததும்பி நிற்கும்
பார்வைகளை படரவிட்டு
பசுமையினை அள்ளிகொள்ள..!

சத்தமின்றி முத்தம் தரும்
மலர்கள் பூக்கும் ஓசையிலே
கற்பனைகள் சுமந்து வரும்
கலைகளும் கைவசம் ஆகையிலே..!

பாலபாடம் தெளிவை தரும்
சாலநட்பு விழிப்பைத் தரும்
கூர்மழுகா அறிவுடனே
மதிநிறைந்தே மனமகிழ்வோம்!

மங்கலம் எங்கும் மணம்வீச
சங்கமம் வந்து கை கோர்க்க
கவிதையில் மனமும் நடைபோட
கட்டிக்கரும்பை நா(ம்) ருசிக்க..!

கசப்பான நினைவுகளும்
காய்ந்து கிடந்த நிலங்களும்
பொய் வார்த்தை ஆகிவிட
போகியென்று போகட்டுமே!

பொங்கலோ பொங்கல் என்றே குலவி
பொங்குவோம் இல்லம் இனிதாக
பொங்கிட தங்கிட சிந்தையை மாற்று
பொங்கலைப் போல புதிதாய் மாறு!
- பாரதிசங்கர், முக்காணி.

0 Responses to “பொங்கலோ பொங்கல்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby