Tuesday, January 11, 2011

டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்


எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அவரது ஆரம்ப கட்ட வாழ்க்கையும் எவ்வளவு வலி நிறைந்தது என்பதை அருமையாக எடுத்துச்  சொல்லியிருக்கிறது அம்பேத்கார் படம். வலியை அனுபவித்தால் தான் வாழ்க்கை பாடத்தை சாதனையாக கொண்டு செல்ல முடியும் என்ற  யதார்த்தத்தை சற்றும் ரசனை குறையாமல் எடுத்துச் சொல்லியிருக்கும் இது படம் அல்ல. நமக்குப் பாடம்.

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் தம்பதியினருக்கு மகனாகப்  பிறந்த பாபாசாகேப் டாக்டர் அம்பேதகர், மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை  அனுபவிக்கிறார்.
 தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருக்கும்பொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச்  சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த வண்டிக்காரன், உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டுகிறான்.  அங்கிருந்து தீண்டாமை தொடங்குகிறது. டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக்  கழகத்தில் உயர்கல்வி கற்கிறார்.

அங்கு அவர்  “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வில் முதுகலைப் பட்டம் பெறுகிறார். பின்னர், “இந்திய  லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது. “பிரிட்டிஷ்  இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு முதுகலை அறிவியல் பட்டம் பெறுகிறார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுக்  கட்டுரையை சமர்ப்பிக்கிறார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுகிறார். அதே சமயம், சமுதாய அமைப்பிலும்  பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடுகிறார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை  மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே  சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று ஆவேசமாகிறார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி  பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும்  வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்துகிறார்.

இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத்  தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை’ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிறது. காந்திஜி இதனை எதிர்க்கிறார். அதனால்,  தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். இதன்  விளைவாக -1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே “புனா ஒப்பந்தம்’ ஏற்படுகிறது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை  என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்படுகின்றன.
வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப்  போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைவதுடன் படம் முடிகிறது. சமூக நீதிப் போராளியாக போராடிய  டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார் என்பதையும் படம் முடிவடையும்போது, ஆங்கில எழுத்துக்களில் காட்டுகிறார்கள்.

இப்படி வரலாற்றுச் சம்பவங்களை பாமரர்களுக்கும் புரியும் வகையில், புட்டு புட்டு வைத்திருக்கிறது இந்த சரித்திர படம்.
அம்பேத்காராக மம்முட்டி வாழ்ந்திருக்கிறார். அவரது தோற்றத்தைப் போலவே அச்சு அசலாக மம்முட்டிக்கு பொருந்தியிருப்பது அருமை.  வெளிநாட்டில் சென்று படிக்கும்போது சகமாணவர் இவரை கேலி செய்து டீயை இவரது கோட்டில் கொட்டும்போது, மன்னிப்புக் கேள்  என்று கர்ஜிக்கும்போதும், அதிகாரியானபின் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் தவிக்கும்போதும், தாழ்த்தப்பட்டவர்களிடம் நிலையைப்  பற்றி எடுத்துக்கூறி, விழித்தெழுங்கள். யாருக்கும் அடிபணியாதீர்கள். போராடுங்கள். இப்படி அடிமைப்பட்டு பயந்து வாழ்வதை விட, இறப்பதே மேல் என்று ஆவேசமாக விழிப்புணர்வைத் தூண்டும்போதும் நம்மை  அறியாமலேயே கைதட்ட வைக்கிறார்.

 “எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை நாய்கள், பூனைகளைவிட  நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன்  நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும்.  யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த  நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’ என்று மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் பேசும்போது திரையரங்கில்  கைதட்டல் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

ஒரு எருமை மாட்டிற்கு முடிவெட்டுவதைப் பார்த்து முடிதிருத்துபவரிடம், எருமை மாட்டிற்கு முடி வெட்டுகிறீர்கள். எங்களுக்கு எல்லாம்  முடி வெட்ட மாட்டீர்களா? என்று பரிதாபமாக கேட்கிறான், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுவனான அம்பேத்கார். நீங்கள் இந்த  எருமை மாட்டை விட கேவலமானவர்கள்  என்று முடிதிருத்துபவர் சொல்வது அந்த காலத்தில் நடந்த தீண்டாமையின் கொடுமையை நம்  கண்முன் நிறுத்துகிறது. ஒரு வரலாற்றுப் படத்தை இன்றைய இளம் தலைமுறையினர் உணரும் வண்ணம், இவ்வளவு நேர்த்தியாக  எடுத்திருக்கும் இயக்குநர் ஜப்பார் பட்டேலுக்கு பாராட்டுக்கள்.
===

2 Responses to “டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்”

Thirumalai Kandasami said...
January 13, 2011 at 2:49 AM

Good but success rate,,

http://enathupayanangal.blogspot.com


ஆதவா said...
January 13, 2011 at 3:04 AM

மூன்றே நாட்கள் மட்டுமே எங்கள் ஊரில் ஓடியது. அச்சமயத்தில் நான் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் நடந்து கொண்டிருந்தேன். பார்க்கமுடியாமல் போனது குறித்து வருத்தப்படுகிறேன்.
விமர்சனம் அருமை


Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby