Sunday, July 12, 2020

தென்னக ஜேம்ஸ்பாண்டு

313 திரைப்படங்கள்...சிஐடி சங்கர்...தென்னக ஜேம்ஸ்பாண்டு...வெள்ளிக்கிழமை நாயகர்...அதிரடியிலும்....குணசித்திர வேடங்களிலும் வெளுத்து வாங்குபவர்...தமிழ்சினிமாவில் மறக்க முடியாத மாமனிதர்....ஜெய்சங்கர்..
இவருக்கு  இன்று (ஜூலை 12) இவரது 83-வது பிறந்த நாள். தாய்மார்களின் பேராதரவுடன் மக்கள் கலைஞராக சினிமாவில் சக்கை போடு போட்டு ராஜாவாகத் திகழ்ந்த இவரைப் பற்றிய ருசிகரத் தகவல்கள்...


"உள்ளத்தின் கதவுகள் கண்களடா..". "அன்புள்ள மான்விழியே...ஆசையில் ஓர் கடிதம்...." "பார்வை ஒன்றே போதுமே..." போன்ற பாடல்கள் இன்னும் எத்தனை காலமானாலும் மக்கள் மனதை விட்டு நீங்குவதில்லை.

சென்னையில் 1938ம் ஜூலை 12 ம் நாள் பிறந்தார் ஜெய் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் ஜெய்சங்கர்.சுப்பிரமணியம் சங்கர் என்பது இவரது இயற்பெயர். முதல் பட இயக்குனர் ஜோசப் தளியத் இவருக்கு ஜெய் என்ற அடைமொழியை சேர்த்தார்.

மயிலாப்பூரில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பைத் தொடர்ந்து சட்டப்படிப்பையும் முடித்தார். கலை ஆர்வம் மேலோங்க விடாத முயற்சியால் மேடை நாடக நடிகராகி பின்னர் சினிமாவில் களம் இறங்கினார்.

1965ல் தனது முதல் படமாக ஜோசப் தளியத் இயக்க இரவும் பகலும் என்ற படத்தில் முத்தாய்ப்பாக நடித்தார். முதல் படமே வெற்றி கண்டது. இந்த படம் 14.01.1965 அன்று பொங்கல் திருநாளில் ரிலீசானது. "உள்ளத்தின் கதவுகள் கண்களடி" என்ற சூப்பர்ஹிட் பாடல் இடம்பெற்ற படமும் இதுதான்.

தொடர்ந்து இரவும் பகலுமாக நடித்தார். அதே வருடத்தில் வெளியான 4 படங்களுமே ஹிட்டானது. தனது 3 வது படமான 'யார் நீ'
படத்திலேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜோடி சேர்ந்தார். ஜெயலலிதாவும் ஜெய்சங்கரும் 1965ல் தான் அறிமுகம் ஆனார்கள்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர்...நடிகர் திலகம் சிவாஜிகணேசன்...என இரு பெரும் ஜாம்பவான்கள்...காதல் மன்னன் ஜெமினி  கணேசன்...என தமிழ்சினிமாவில் கோலோச்சிய காலகட்டத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கி 'மக்கள் கலைஞராக' உருவெடுத்தார் ஜெய்சங்கர். தமிழ் சினிமாவும் அந்த ஸ்மார்ட்டான இளைஞரை வாரி அணைத்துக் கொண்டது. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் இவரது நடிப்பைப் பற்றி கேள்விப்பட்டு 'குழந்தையும் தெய்வமும்' என்ற படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தது. பட.ம் 19.11.1965ல் ரிலீஸானது. மாபெரும் வெற்றி பெற்றது. தாய்மார்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

வாரம் ஒரு படம் இவருக்கு தொடர்ந்து வெளியானது. இதனால் 'வெள்ளிக்கிழமை நாயகர்' ஆனார். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற பிரம்மாண்ட நிறுவனத்தின் வல்லவன் ஒருவன்...இரு வல்லவர்கள்...சிஐடி சங்கர் படங்களைத் தொடர்ந்து இவருக்கு தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்ற பட்டம் கிடைத்தது.

1978ல் மட்டும் 13 படங்கள் நடித்தார். எம்ஜிஆருடன் நடித்த கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்.

அதிரடி...நகைச்சுவை....குணசித்திரம்...வில்லன் என கிடைத்த வேடங்களில் எல்லாம் வெளுத்து வாங்கினார்.

பூவா தலையா...குலமா...குணமா...வல்லவன் ஒருவன்...கருந்தேள் கண்ணாயிரம்...துணிவே துணை ...ஜம்பு...கன்னித்தீவு...ஊமை விழிகள்...இவரது நடிப்பில் மறக்க முடியாத படங்கள்.

ரஜினியுடன் வில்லனாக முரட்டுக்காளை...கமலுடன் சவால் படங்கள் சக்கை போடு போட்டன.

சினிமாவில் சிறு பட நிறுவனம்...சிறு பட்ஜெட்...புதிய தயாரிப்பாளர்களைத் தோள் கொடுத்து தூக்கி விட்ட தயாளன் இவர்.

இவரது முதல் ஆக் ஷன் படம் ' இது எப்படி இருக்கு?' பி அண்டு சி ஏரியாக்களில் ஹிட் அடித்தது. 150வது படம் டாக்சி டிரைவர். இதில் ஸ்ரீதேவி ஜோடி. முடிசூடா மன்னன், ராஜாவுக்கேற்ற ராணி படங்களில் ஸ்ரீதேவி ஜோடி.  அதே கால கட்டத்தில் மேளதாளங்கள்...வாழ நினைத்தால் வாழலாம்...படங்களில் ஸ்ரீபிரியா ஜோடி ஆனார். ஆனால் இவரது ஆஸ்தான நாயகி ஜெயசித்ரா...தான்.

கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் வண்டிக்காரன் மகன் படத்தில் ஜெயசித்ரா தான் கதாநாயகி.

இப்படம் ஜெய்சங்கரை பட்டி தொட்டிகளில் எல்லாம் கொண்டு போய் சேர்த்தது. 1977ல் அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் நடித்தார். 1999ல் பூவாசம் படத்தில் நடித்தார். இதுவே இவரது கடைசி படம்.

இதுவரை ஜெய்சங்கரை வைத்து படமெடுத்த எந்த தயாரிப்பாளரும் நஷ்டப்பட்டதில்லை. தனது வருமானத்தில் பெரும்பங்கை அனாதை இல்லங்களுக்கே அள்ளிக்கொடுத்த மனிதநேயர் ஜெய்சங்கர் 03.06.2000 அன்று மாரடைப்பால் காலமானார்.

-பாரதிசங்கர்,
முக்காணி

0 Responses to “தென்னக ஜேம்ஸ்பாண்டு”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby