Tuesday, May 10, 2011

பிறப்பின் ரகசியம்

சத்தியம் சில சமயம் தடுமாறுவது போல்தான் காட்சியளிக்கும். ஆனால் அதுதான் நிரந்தரமானது. அது என்றென்றும் தலைநிமிர்ந்து நிற்கும்.
எதை இழந்தாலும், யாரை இழந்தாலும் மனோதைரியத்தை மட்டும் இழந்துவிடவே கூடாது.
ஒரு நல்லவன் அழும்போதுதான் நாலுபேர் சிரித்து வாழ முடியும்.  

இவை ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். பேசிய புரட்சி வசனங்கள்.

நம் வாழ்விலும் இதுபோன்ற இக்கட்டான தருணங்கள் நிறையவே வருகின்றன. அதுபோன்ற நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தான் மேற்கண்ட வரிகள் நமக்கு அழகாக சுட்டிக்காட்டியுள்ளன.

“இக்கரைக்கு அக்கரை பச்சை” என்பார்கள். எது இக்கரை என்று தெரிய வேண்டும். அதற்கு முன் கரை எது என்று தெரிய வேண்டும். கரை கடக்க என்னென்ன கறைகளைக் (மனக்குறை, திறமையின்மை, நம்பிக்கை இல்லாமை, மனஉறுதி இல்லாமை போன்ற ஆமைகள் தான் நமக்கு கறைகளாக இருந்து வருகின்றன.) களைய வேண்டும் என்று தெரிய வேண்டும். இவை எதுவுமே தெரியாமல் நாம் எப்படி கரையைக் கடக்க முடியும்?

ஆற்றின் இக்கரையில் இருந்து பார்க்கும்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று பார்க்க அழகாகத் தான் இருக்கும். அக்கரைக்கு சென்றவுடன் தான் தெரியும், இங்கு ஒரே மரங்கள் தானே உள்ளன. மனிதர்கள் ஒருவர் கூட இல்லையே. அடர்ந்த காட்டில் கொடிய மிருகங்களும், விஷஜந்துக்களும் நம்மை பயமுறுத்துகிறதே. இதற்கு நாம் முன்பு இருந்த அக்கரைக்கே சென்று விடுவோமா என்று நினைக்கத் தோன்றும்.

இக்கரை வந்தவுடன் தான் தெரியும். சே...என்ன மனிதர்கள். எத்தனை பொறாமை... எத்தனை சுயநலம்...ஒருவர் முன்னேறுவது மற்றவருக்கு பொறுக்கவில்லையே..! கொலை, களவு, காமம், சூது, புறங்கூறுதல் என்று மிகுந்துள்ள இந்த ஊரில் வாழ்வதை விட, கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் வாழ்வது எவ்வளவோ மேல் என்று எண்ணத் தோன்றும்.

இதுதான் மனம் செய்யும் சேட்டை. இதைத் தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்றார்கள். இதில் ஆழமான பொருள் ஒன்று உள்ளது. அதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

இதைத்தான் நம் முன்னோர்கள் அன்றே சொல்லி வைத்திருக்கிறார்கள். அதாவது, இக்கரை என்பது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவார், நீந்தார்
இறைவனடி சேரா தார்.
என்பது வள்ளுவர் வாக்கு. பிறவி என்னும் பெருங்கடலை நீந்திக் கடக்க வேண்டும் என்று தான் தெய்வப்புலவரும் சொல்லியிருக்கிறார். கடந்தால் தான் பச்சைப் பசேல் என்று இருக்கும் அக்கரைக்குப் போய் சேர முடியும். அதற்கு நாம் இந்த பிறவியிலேயே பல உண்மைகளை நம் மதி கொண்டு நுட்பமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் அக்கரையில் போன பின்பு எந்தக் குழப்பமும் வராது. இல்லாவிட்டால், எது நல்லது, எது கெட்டது என்ற குழப்பம் ஏற்பட்டு விடும். இக்கரையில் இருக்கும்போதே நாம் அக்கறையுடன் நம் இலக்கை நோக்கி பய ணம் மேற்கொண்டால்தான், அக்கரை நமக்கு சர்க்கரையாக விளங்கும். இல்லையேல், எக்கரையும் கறையாகத் தான் நமக்குக் காட்சியளிக்கும்.

1 Responses to “பிறப்பின் ரகசியம்”

Sivamjothi said...
January 10, 2013 at 10:23 PM

http://sagakalvi.blogspot.in/2013/01/blog-post.html


Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby