Thursday, May 5, 2011

சொர்க்கம் எங்குள்ளது?

நமக்கு எது நினைத்தாலும், உடனே அது நடந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், வாழ்க்கையே வெறுப்பாகி விடும். ஏன் இந்த வெறுப்பு ஏற்படுகிறது என்பதை சற்றே சிந்தித்துப் பார்த்தோமானால், ஒரு தெளிவான உண்மை நமக்குப் புலப்படும்.

 நமக்கு மட்டும் தான் எல்லா துன்பங்களும் வருகின்றனவா? எதை எப்போது, எங்கு செய்தால் காரியம் வெற்றி பெறும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதைத் தான் இடம், பொருள், ஏவல் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இடம், பொருள், ஏவலை அறிந்து நாம் ஒரு காரியத்தை செயல்படுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும்போதுதான்  முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் வளரும். நம்மால் செய்ய முடிகிற காரியத்தைப் பற்றி மட்டும்தான் சிந்திக்க வேண்டும். இல்லாவிட்டால், நமது பொன்னான நேரம் பாழாகி விடும்.

நாம் பார்க்கும் பார்வை இரண்டு வகையானது. ஒன்று அறிவுப்பூர்வமானது. மற்றொன்று காட்சியைத் தருவது. நாம் காணும் பொருள் காட்சியாக நம் கண்களுக்குத் தெரிகிறது. அந்தப் பொருளைப் பற்றிய அறிவு ஏற்கனவே நமக்குத் தெரிந்திருப்பதால், அந்தப் பொருளைப் பற்றி வேறு தகவல்களை அறிந்து கொள்வதில் நாம் எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருக்கிறோம். இல்லாவிட்டால், புதிய பொருளாக நம் கண்ணுக்கு தெரியும். அதைப் பற்றி அறிய ஆவலாக இருப்போம். அந்தப் பொருளுக்கான தகவல்களை சேகரிக்க முயற்சிப்போம். நமக்கு அந்தப் பொருளால் எதுவும் நன்மை என்றால் தான் அதைப் பற்றி அறிய முயற்சிப்போம். இல்லாவிட்டால், தேமே என்று இருந்துவிடுவோம்.
இந்த உலகில் அனைவரும் சுயநலத்தை அடிப்படையாக வைத்தே எல்லா செயல்களிலும் ஈடுபடுகின்றனர். அதனால்தான் அவர்களால் எந்த ஒரு செயலையும் முழுஈடுபாட்டுடன் செய்ய முடிவதில்லை. காரியம் கைகூடாமல் போகிறது. அல்லது நீண்ட நாட்களாகிறது. அதுவரை பொறுமை அவசியம். அப்படி இருக்க முடியாதவர்களுக்கு தோல்வி பயம், மனக்கலக்கம், வெறுப்பு, விரக்தி என்று வரிசையாக அனைத்துவித துன்பங்களும் கைகோர்த்து வந்து விடுகின்றன.

நாம் தினமும் நிறைய புதிய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும்போதுதான் அறிவுத்தேடல்கள் நமக்குள் கொளுந்துவிட்டு எரியும். அப்போதுதான் நாம் பார்க்கும் பார்வைகள் அனைத்தும் அறிவுப்பூர்வமானதாக மாறும். அறிவை அடிப்படையாகக் கொண்டே நாம் அனைத்து செயல்களையும் செய்து வரும் போது அதில் சுயநலம் என்பது மறைந்து போய் சுயநலம் பொதுநலமாகி விடுகிறது.

இந்த திறமையை வளர்த்துக் கொள்ள நாம் பார்க்கும் பார்வையை மாற்ற வேண்டும். நமது சிந்தனையில் புதிதாகவும், தெளிவானதாகவும் மாற வேண்டும். அப்போதுதான் புதிய மனிதனாக மாற முடியும். ஒவ்வொருவரும் தன்னலம் என்பதை மறந்து, பொதுநலத்துடன் செயல்படும்போது மனித சமுதாயம் மகத்தானதாக மாறுகிறது.

உலகமே சொர்க்கபூமியாக நமக்கு தெரிகிறது. இந்த உண்மையை நாம் உணரும்போது நாம் இருக்கும் இடத்தில் தான் சொர்க்கமும், நரகமும் உள்ளது என்பது நமக்குத் தெரியவரும். 

0 Responses to “சொர்க்கம் எங்குள்ளது?”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby