Monday, February 3, 2014

பாரடா உனது மானிட பிறப்பை

 
கொட்டு முரசே, கொட்டு முரசே!
எட்டு திக்கும் சத்தம் வரட்டும்...
சங்கடம் தீர்க்கும் சபதம் ஏற்போம்
தர்மத்தாயினை என்றும் காப்போம்!


மேலோர் கீழோர் எவருமில்லை
உயர்ந்தோர் தாழ்ந்தோர் எவருமில்லை
வேண்டாம் வேண்டாம் பிரிவினை வேண்டாம்
யாவரும் ஒன்றெனில் இந்தியர்தாமே!

ஊழல் களையை வேருடன் களைவோம்
நெஞ்சை நிமிர்த்தி எங்கும் செல்வோம்
எண்ணம் உயர, எதிலும் வெல்வோம்
வெற்றி கிடைக்க எதுவும் துறப்போம்!

சத்தியம் காப்போம்...சதிசெயல் மாய்ப்போம்
முத்தமிழதனை மூச்சாய் மதிப்போம்
வித்தகு சாதனை விண்வரை படைப்போம்
ஒற்றுமை காக்க ஓயாது உழைப்போம்!

மயக்கும் மாயைகளை விரட்டி அடிப்போம்
மானிட வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்போம்
பூமியில் தனக்கென தனித்தடம் பதிப்போம்
புவியைக் காப்போம், புரட்சி செய்வோம்!

இருந்தோம், வாழ்ந்தோம், போவோம் என்று
இருக்கும் மனிதா! தவிப்பது என்ன?
இனியும் வீணாய் அலைந்திட வேண்டாம்
இதுதான் உண்மை, உணர்ந்தால் நன்மை!

மானுடம் வெல்லும் மனிதநேயம்
கடவுளும் உண்டு மனிதருள்தானே
சிறகினை விரித்து பறப்போம் நாமே
வானம் உந்தன் எல்லை தானே!

பாரடா உன் மானிட பிறப்பை
எத்தனை எத்தனை மகத்துவம் அதிலே
அதனை என்றும் உணர்வாய் தேடி
இன்றே தொடர்வாய் நன்மையை நாடி!


- பாரதிசங்கர்
முக்காணி.






 

0 Responses to “பாரடா உனது மானிட பிறப்பை”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby