Friday, April 11, 2014

நான் சிகப்பு மனிதன்



நீண்ட இடைவேளைக்குப் பிறகு என்னை திரைவிமர்சனம் செய்ய தூண்டிய படம். நார்கொலாப்ஸி என்ற ஒரு வியாதி தான் கதையின் நாயகனை கதையோடு ஒட்ட வைத்திருக்கிறது. இந்த வியாதி.....

 ஒரு வகையான தூக்க வியாதி. அதிர்ச்சியடையுமாறு சத்தம் கேட்டால் நாயகன் தூங்கி விடுவான். இந்த வியாதியை கையில் எடுத்துக்கொண்டு வழக்கமான பழிவாங்கும் படலம்தான் கதை. திரைக்கதையை நகர்த்திய விதம் நம்மை படம் முடியும் வரை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கிறது. அதற்காகவே இயக்குநர் திருவிற்கு மேலும் ஒரு திரு சேர்த்து பாராட்டலாம்.

தமிழ் சினிமாவில் இது ஒரு புதுவித முயற்சி என்றே சொல்லலாம். படத்தின் டைட்டில் பழைய சூப்பர்ஸ்டாருக்குரியது. அதில் தங்கையை கெடுத்தவனை பழி வாங்குகிறார் சூப்பர்ஸ்டார். இதில் காதலியைக் கெடுத்தவனை பழி வாங்குகிறார்.

வி--ஷால் படத்திற்கு படம் நடிப்பில் மெருகூட்டுகிறார். தயாரிப்பிலும் கதையைத் தேர்வு செய்வதிலும் நிறையவே மெனக்கெடுவது தெரிகிறது. தூக்கம் வரும்போதும் அதை தடுக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார்.  ஒரு கட்டத்தில் காதலியின் கற்பழிப்பு சம்பவத்திற்கு தனது தூக்கமே காரணம் எனும் போது அவர் அதையே நினைத்து வீட்டில் ஷவரை திறந்து விட்டு அதில் நனைந்து கொண்டு  அழும்போது நடிப்பில் பின்னியிருக்கிறார். தூங்கினால் கூட அனைத்தும் மைன்டில் ரிக்கார்டாகும் என்பதை கயவர்களின் பிடியில் காதலி சிக்கித் தவிக்கும்போது தூங்கிக் கொண்டே கண்ணீர் விடுவது படம் பார்ப்பவர்களை உச் கொட்ட வைக்கிறது.

அழகுச்சிலையாக வரும் லட்சுமிமேனன் தன்னை பெண் பார்க்க வருபவரிடம் கேள்வி கேட்டு அவரை மறுக்கும் விதமும் அழகு. தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற விஷாலுடன் இணைந்து கருத்தரிக்க அவர் செய்யும் ஐடியா நம்மை அடடா என்று சொல்ல வைக்கிறது.


என் மகளுக்கு சாதி மதம் பார்த்துக்கூட நான் கல்யாணம் பண்ணிடுவேன். ஆனால் நான் வாரிசு கொடுக்க முடியாதவனுக்கு கல்யாணம் கட்டிக் கொடுக்க தயாராயில்ல என்று பேசும் ஜெயப்பிரகாஷ் மகள் லட்சுமிமேனனுக்கு தந்தையாக நடித்திருப்பது யதார்த்தம்.

விஷாலின் நண்பனாக வரும் சுந்தரே வில்லனாக நடித்திருப்பது அவருடைய நடிப்புக்கு தீனி போடும் விதத்தில் உள்ளது,
முதல் பாதி விறுவிறுப்பு,
இரண்டாம் பாதியில் இயக்குநர் முடிச்சை அவிழ்ப்பதில் போராடியிருக்கிறார், அதிலும் தண்ணீர் பட்டால் விஷாலின் தூக்கம் கலைந்து விடும் என்பதற்காகவே கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் பைப் உடைந்து நீர் வரவழைத்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்,


படத்திற்கு நான் சிகப்பு மனிதன் என்று வைப்பதைக் காட்டிலும் நான் தூங்கும் மனிதன் என்று வைத்திருக்கலாம், ஆனாலும் படத்தை தூக்கத்தை வைத்துக் கொண்டு ஜெயிக்க போராடியிருக்கும் டைரக்டரின் முயற்சியை பாராட்டலாம்,

நான் சிகப்பு மனிதன் விஷாலின் வெற்றிப்பட வரிசையில் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை,

0 Responses to “நான் சிகப்பு மனிதன் ”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby