Monday, January 17, 2011

ஆட்டம் போடுமா ஆடுகளம்?

 சூப்பர்ஸ்டாரை வைத்து தயாரித்த எந்திரனின் வெற்றிக்குப் பிறகு சன்பிக்சர்சின் வெளியீட்டில், அவரது மருமகன் தனுசை வைத்து தயாரித்திருக்கும் படம் என்பதால், எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுடன் படம் ஆரம்பிக்கிறது.
பொல்லாதவனுக்குப் பிறகு மறுமுறையும் தனுசை வைத்து இயக்கி களத்தில் ஆடியிருக்கிறார், வெற்றிமாறன்.
 ஆரம்பத்திலேயே பகடைக்காய்களை உருட்டி விட்டு, ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கும் வெற்றிமாறன், அவரது வெற்றியையும் எதிர்பார்த்திருக்கிறார்.

தமிழர்களின்  பாரம்பரியத்தை பறைசாற்றும் வீரவிளையாட்டுகளில் ஒன்று சேவல்சண்டை.  தனது ஆடுகளத்திற்கு தோதாக யாரும் தொடாத இந்த சண்டையை பிரதான களமாக்கி, கையாண்டிருக்கிறார், இயக்குனர்.
படம் பற்றி சொல்லப் போனால், முதல் பாதி விறுவிறுப்பு. அடுத்தபாதி சவ்வாய் இழுக்கிறது .

பேட்டைக்காரருக்கும், ரத்தினம் குழுவினருக்கும் சேவல் சண்டையில் அடிக்கடி மோதல் உண்டாகிறது. பேட்டைக்காரரின் எதிர்ப்பையும் மீறி, அவரது சிஷ்யரான தனுஷ், தான் வளர்த்து வந்த  சேவலைக் கொண்டு வந்து போட்டியில் அதிக பந்தயம் கட்டுகிறார். அவரது சேவல் சண்டையில் வெற்றி பெற்றுவிடுகிறது. அதன்பிறகு ஏற்படும் பிரச்சினைகளால் அவருக்கும், பேட்டைக்காரருக்கும் என்ன நடக்கிறது? என்பதே கதை.

சேவலை சண்டைக்கு ஏற்ற விதத்தில்  தயார்படுத்தும் விதம், சேவல் சண்டையிலேயே ஊறிப்போன மக்கள் என்று பார்த்து பார்த்து கதையை செதுக்கியிருக்கிறார், இயக்குனர்.

ஆங்கிலோ இந்தியப் பெண் தப்சி தன்னைக் காதலிக்கிறாள் என்று தெரிந்தவுடன் லுங்கி உடுத்திக் கொண்டு ஆட்டம் போடும் தனுசு, ரசிகர்களை தங்கள் இருக்கையை மறந்து எழுந்து ஆட்டம் போட வைத்திருக்கிறார்.  அவர் பேசும் வசனங்கள் அவரை மதுரைக்காரராகவே இருப்பாரோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது. தப்சி அழகுப் பதுமையாக மட்டுமே வந்து போகிறார். வசனங்களில் சற்று ஆங்கில ஆதிக்கத்தைக் குறைத்திருக்கலாம்.

பேட்டைக்காரராக வரும் கடாமீசைக்காரர் ஜெயபால் (ஈழத்துக்கவிஞர்) கண்களை உருட்டி மிரட்டுகிறார். அவரது இளம் மனைவி, ஆங்கிலோ இந்திய குடும்பத்தினரின் நண்பரான ஜெயப்பிரகாஷ், கிஷோர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவில் மதுரை மண்ணின் வாசனை தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில், ஒத்த சொல்லால பாடல் ரசிகர்களை  தனுசுடன் சேர்ந்து ஆட்டம் போட வைக்கிறது. யாத்தே...யாத்தே பாடல் மெலடி.
வழக்கமாக கதாநாயகன் வில்லனை நையப்புடைத்து எடுக்கும்போது கிராபிக்ஸ் காட்சிகள் விசுவரூபம் எடுக்கும். அப்படி இல்லாமல், சேவல் சண்டையில் கிராபிக்சை முடுக்கி விட்டிருக்கிறார்கள், ராம்போ ராஜ்குமார், ராஜசேகர் குழுவினர்.  சண்டைக்காட்சியில் புதுமையை செய்ய முயன்றதற்கு பாராட்டுக்கள்.

ஆடுகளம் சேவல் சண்டையையும், தமிழர்களின் வீரத்தையும், உணர்வுகளையும் ரசித்து ஆடியிருக்கும் மைதானம்.

0 Responses to “ஆட்டம் போடுமா ஆடுகளம்?”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby