Monday, August 12, 2013

சுதந்திர தின சிறப்பு கவிதை


சோகம் கொண்டு சோர்ந்த நெஞ்சில்
வேகம் வந்து சேர்ந்ததடா

வெந்து வெந்து போன மண்ணில்
வீரம் வந்து சேர்ந்ததடா

சாவைக் கூட துச்சம் என்று
சரித்திரமும் சொன்னதடா


மானம் காத்து நின்ற மறத்தை
மனமுவந்து காப்போமடா

எட்டுத்திக்கும் சொல்லும் மட்டும்
வெற்றி வாகை சூடுவோமே

என்று தணியும் அடிமை மோகம்
என்று சொன்னது பாரதீடா

உச்சி முகர்ந்து பார்க்கும் வேளை
வெற்றி உந்தன் வாசமடா

மண்ணை போற்றி வாழும் வரைக்கும்
உந்தன் பெருமை சேருமடா

கண்ணை இமை போல் காக்கும் வரை
விண்ணும் உனது காலடிதான்

வீராவேசம் போட வேண்டாம்
வீணில் கவலை கொள்ள வேண்டாம்
தவறித் தவறும் செய்ய வேண்டாம்
பாரும் உன்னை திரும்பிப் பார்க்கும்!

கானல் நீரைப் போல் தானே
வீணாய் போகும் சதிவலைகள்
விண்ணை முட்டும் சாதனைகள்
மண்ணில் இருந்து வந்ததுதான்

சுதந்திரத்தை தேடாதே
உனக்கு மட்டும் சொந்தமில்லை
எல்லோரிடமும் இருக்கும் மட்டும்
யாவருக்கும் சொந்தம்தானே!

அன்பும் அறமும் இருக்கும்போது
அகிலம் எல்லாம் உனக்கடிமை
எண்ணம் உயர இருக்கும்போது
எல்லா உயிரும் உனக்கடிமை

அடிமை என்றும் சொல்ல வேண்டாம்
அவசரத்தில் பேசும் போதும்
அன்பில் எதுவும் அடிமையில்லை
பண்பாய் நாமும் வாழுவோமே!

- பாரதிசங்கர்


0 Responses to “சுதந்திர தின சிறப்பு கவிதை”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby