Thursday, January 12, 2012

ஒற்றுமைக்கு ஒரு விழா

இயற்கை தந்த பண்டிகை
இனிமை நிறைந்த வண்ணத்தில்
மகிழ்ச்சியுடன் திகழவே
மனதைக் கவரும் திருவிழா


மண்ணின் மகிமை உணரவே
மலர்ந்து வரும் திருவிழா
பனிதூங்கும் காலையில்
துயில் எழுப்பும் திருவிழா



பறவைகளின் சப்தமும்
மலர் பூக்கும் ஓசையும்
தென்றலென தவழ்ந்திட
தொட்டுப் பேசும் திருவிழா

சூரியனின் பார்வையில்
வணக்கம் செலுத்தும் வேளையில்
காலை செய்த மாயமோ
கலைகள் யாவும் விளங்குதே!

மஞ்சள் குலையும் வைத்தாச்சு
கரும்பு கட்டும் வைத்தாச்சு
காய்கறிகளோ படையலில்
பொங்கல் பொங்குது பானையில்!

பொங்கலோ பொங்கல் பாடிக்கொண்டு
குலவை சத்தம் போட்டுக்கொண்டு
குமரிகள் வந்து கும்மிகொட்ட
கொண்டாட்டங்கள் தொடருதே!

சமையல் செய்யும் வேளையில்
மணம் வீசும் நேரத்தில்
பசி கிள்ளி எடுக்கையில்
பந்தி போடும் திருவிழா!

பச்சைப்புல் வெளியிலே
ஆற்றங்கரை ஓரத்தில்
நேற்று வைத்த பொங்கலை
ருசித்து ருசித்து உண்பரே!

கட்டிக்கரும்பை சுவைத்திடும்
குறும்புக்கார சிறுவர்கள்
வானில் விரும்பி செலுத்துவர்
பட்டம் பெற்ற(றாத) போதிலே!

சிலிர்த்து எழும் காளைகளை
உசுப்பி விடும் காளையர்
மலைக்கச் செய்யும் வேலையை
மகிழ்வுடனே செய்வரே!

இயற்கையை போற்றிடும்
இனிமையான திருவிழா
தங்க தமிழ் நாட்டிலே
தமிழருக்கு ஒரு விழா!

உலக அரங்கில் போற்றவே
உழைப்பில் உயர்ந்து மாறணும்
ஒன்று கூடி வாழவே
ஒற்றுமைக்கு ஒரு விழா!
- பாரதி சங்கர், முக்காணி.

0 Responses to “ஒற்றுமைக்கு ஒரு விழா”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby