Saturday, December 31, 2011

புத்தாண்டு வாழ்த்து

images.jpgஅன்பும், அமைதியும்
அழகும், ஆர்வமும்
புதுமையும், புத்துணர்வும்
நாளும் பழகி வர..!


கண்களை காக்கும் இமைபோல
கருத்தாய் நாமும் காத்திட
மகிழ்ச்சியின் பொலிவில்
முகமும் மலர..!

தேன் தரும் வார்த்தையும்
கனியிதழ் வாயில் தவழ்ந்திட
காரியம் சாதிக்கும் ஆசைகள்தான்...
வெறும் கனவுகள் அல்ல
கற்பனை அல்ல..!

நிஜங்கள் என்றும் நிஜம்தானே
நியாயமும், தர்மமும் இதிலென்ன?
மண்ணின் மகிமையை உணர்ந்தாலே
மலரும் புதிதாய் மனிதநேயம்!

நெகிழ்த்தும் நினைவுகள்
நெஞ்சை அள்ள
கொள்ளை இன்பம் கைகூடிவர
குலுங்கி சிதறும் சிரிப்பும் வருமே..!

உடலில் வளம், உள்ளத்தில் பலம்
நெஞ்சில் ஈரம், மஞ்சம் கொஞ்சும்
காட்சிகள் பழசு, பார்வைகள் புதிது
மலரின் மேல் வண்டு, தாவுவது கண்டு!

நட்பில் தூய்மை மலர வேண்டும்
அன்பில் உண்மை பெருக வேண்டும்
தென்றல் வந்து தீண்டும்போது
மனதின் நீளம் குறைந்திடுமே..!

கோபங்கள் தாபங்கள் உடலுக்கு தொல்லை
கேவலம், தோல்விகள் நமக்கு இனி இல்லை
ஓய்வுகள், தேவைகள் போதும் போதும்
சோதனை, சாதனை வந்திடும் நேரம்!

மனங்களை வெல்ல மாலைகள் வேண்டாம்
மயக்கங்கள் தீர போதனை வேண்டாம்
உதட்டில் ஒன்று, உள்ளத்தில் ஒன்று
பேசும் வஞ்சக நெஞ்சம் வேண்டாம்!

கரும்பினில் சாறு பிழிவது போல
கலைதனை காவியமாக்கிடல் வேண்டும்
காலையில் மலர்ந்த தாமரை போல
யாவரும் புதிதாய் பூத்திட வேண்டும்!
  -பாரதி சங்கர், முக்காணி.


0 Responses to “புத்தாண்டு வாழ்த்து”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby