Saturday, October 1, 2011

எது வாழ்க்கை?

சமரசமே எதுவென்று புரியாமல்
பேசுவார் சமரசம்
மனம் திறந்து பேசுவேன் என்றே
தன் மானம் திறந்து பேசுவார்!


பகுத்தறிவாய் பேசுகிறேன் என்று
பட்டறிவை பேசுவார்
போதாது போதாது என்பார்
போதனை செய்தால் போதும் என்பார்!

என்ன வாழ்க்கை, என்ன வாழ்க்கை
விரக்தியாய் இருந்து புழுக்கத்தில் தவிப்பர்
காரணம் கேட்டால், புரியவில்லை
காலத்தின் தன்மையும், தெரிவதில்லை!

நாளும் பொழுதும் ஓடியதே
இனி எதை நாம் பெறுவோம்
எதை நாம் செய்வோம்
எல்லாம் மாயை, எல்லாம் மாயை!

கிறக்கத்தில் உளறும் பித்தனைப் போல
பிதற்றலாய் தினமும் காரியம் செய்வர்
பதற்றமும் இல்லை, பரிகாசம் இல்லை
நேசித்த நெஞ்சை மறக்கவும் இல்லை!

மனதை உறுத்தும் நெறிமுறை தவறுகள்
கணக்காய் முடிக்கும் தண்டனைகாலம்
இதுவே கடைசி இனிமேல் இல்லை
என்றே சொல்லி தப்புவோர் உண்டு!

என்னதான் சொல்லி தப்பினாலும்கூட
மனசாட்சி உன்னை உறுத்தவே செய்யும்!
மனம் உள்ளோர் யாவரும் மனிதர்கள் தானே
மனம் திறப்பதாலே பிரச்சினை தானே!


இனிவரும் காலம், இளையோர் காலம்
என்றே யாரும் பயப்பட வேண்டாம்!
யாவரும் உழைப்போம், யாவையும் ரசிப்போம்
ஒவ்வொரு கணமும் புதுமையை படைப்போம்!

புதுமையை நம்பி புரட்சியை விதைத்து
பழமையை கேலி பேசுதல் முறையோ?
அனுபவம் சொல்லும் ஞானப்பாடம்
பக்குவம் தருமே வாழ்நாள் முழுதும்!

இதை நீ இங்கு ஏற்றுக் கொண்டு
அனுதினம் நம்பி செயல்படும்போது
வேறொன்றும் எனக்கு தேவையில்லை..
இதுவே எனக்கு தக்க சன்மானம்!
- பாரதி சங்கர், முக்காணி.

0 Responses to “எது வாழ்க்கை?”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby