Friday, August 12, 2011

உங்கள் கையில் சுதந்திரம்


சுதந்திரத்தை எண்ணி எண்ணி
சுகமறியா கோழைகளை
பரமபத விளையாட்டாய்
பகடைக்காயாய் உருட்டுவார்!


பழைய கணக்கை தீர்க்கவே
பாவம் செய்யத் தயங்குவார்
கனவில் கூட அற்புதம்
காண இங்கு வழியில்லை!

நனவு நெஞ்சை வாட்டுதே
கனவும் பலிதம் ஆகுமோ?
சலசலப்பு அடங்கவே
காத தூரம் ஓடவா?

சின்ன சின்ன கணக்குகள்
பிழையின்றி நாம் செய்யவே
பெரிய பெரிய தவறுகள்
தட்டுத் தடுமாறுமே!

புள்ளி வைத்தால் கோலமோ
கண்ணி வைத்தால் வேட்டையா?
பாடம் படித்தால் வேலையா
வேலை செய்தால் கூலியா?

நிஜங்கள் செய்யும் மாயமும்
நிழல்கள் செய்யும் காயமும்
நடந்து நடந்து பார்க்கவே
நாளும் நாளும் காணலாம்!

வாழ்வின் நாட்கள் எண்ணுவோர்
வாழ்ந்த நாட்கள் மறப்பரே!
காலதேவன் கோவிலில்
காலடியில் கிடக்கின்றார்!

இந்த ஜென்மம் வழியில்லை
இன்னோர் ஜென்மம் வேண்டுமோ?
கண் திறந்து பாருங்கள்
கவலை தீர தேடுங்கள்!

இன்னல் என்ன உள்ளது?
இறைவன் எங்கு இருக்கிறார்?
உள்ளபடி பாருங்கள்
உங்கள் கையில் சுதந்திரம்!
& பாரதி சங்கர், முக்காணி.

0 Responses to “உங்கள் கையில் சுதந்திரம்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby