Thursday, May 12, 2011

புதுமையை விரும்புபவரா, நீங்கள்?

எங்கும் புதுமை. எதிலும் புதுமை என்று எதற்கெடுத்தாலும் எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள். அப்படிப்பட்டவரா நீங்கள்?


கீழே உள்ள ஒவ்வொரு கேள்விகளுக்கும் உங்கள் உண்மையான விடையைக் குறித்துக் கொள்ளுங்கள். கேள்விகளின் முடிவில் ஒவ்வொரு விடைகளுக்குமான மதிப்பெண் குறிக்கப்பட்டுள்ளது. உங்களின் மொத்த மதிப்பெண்கள் குறித்த மதிப்பீடு இறுதியில்.
1. உங்களுக்குப் பிடித்த ஓவியர் யார்?
அ) எம்.எப்.உசேன், ஆ) ராஜா ரவிவர்மா, இ) பிக்காசோ

2. அறிவியலில் நிறைய ஆர்வம் உள்ள ஒரு நண்பர் உலகம் உருண்டை இல்லை. முக்கோண வடிவில் இருப்பதாகத்தான் படுகிறது என்றால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
அ) அப்போ உலகம் உருண்டைன்னு கண்டுபிடிச்ச விஞ்ஞானிகளெல்லாம் என்ன...முட்டாளா?
ஆ) எதனாலே அப்படிச் சொல்றே?
இ) நல்லா யோசிச்சுத்தான் சொல்றியா?

3. கீழே உள்ளவற்றில் எந்த வகைத் திரைப்படத்தைப் பார்க்க விருப்பப்படுவீர்கள்?
அ) ஏற்கனவே பார்த்து ரசித்த ஒரு சிறந்த திரைப்படம்.
ஆ) பத்திரிகைகளில் நன்கு பாராட்டப்படும் ஒரு புதிய திரைப்படம்.
இ) இதுவரை எந்த விமர்சனமும் வெளிவராத புதிய திரைப்படம்.

4. கோவிலில் சொற்பொழிவாற்றும்போது, இடையிடையே ஆங்கில வார்த்தைகளையும் கலந்து பிரசங்கம் செய்கிறார் ஒருவர். நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
அ) ஒரு அளவுக்குள் இருந்தால் தவறில்லை.
ஆ) இதெல்லாம் வேண்டாத வேலை.
இ) மக்களுக்குப் புரிய வேண்டும். அவ்வளவு தானே. மொழிகளைக் கலந்தால் என்ன?
5. சிறந்தது புதுமையே! பழமையே! என்ற தலைப்பில் பட்டிமன்றம். நீங்கள்தான் நடுவர். உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
அ) பேச்சாளர்கள் எப்படிப் பேசினாலும் புதுமைக்கு ஆதரவாகத்தான் என் தீர்ப்பு.
ஆ) புதுமையே என்ற அணியைச் சேர்ந்தவர்கள் சிறப்பாகப் பேச வேண்டுமே என்று மனது படபடவென்று அடித்துக் கொள்ளும்.
இ) எந்த அணியினர் சிறப்பாகப் பேசினார்களோ, அவர்களுக்கு ஆதரவாகத் தான் என் தீர்ப்பு இருக்கும்.

6. எந்த வகை வண்ணங்களில் உங்களுக்கான உடைகளை வாங்குவீர்கள்?
அ) பலவிதமான நிறங்கள் கொண்ட உடைகள் வாங்கி மாறி மாறி அணிவேன்.
ஆ) பலவிதமான நிறங்கள் கொண்ட உடைகளை வாங்கினாலும், அவற்றில் சில நிற உடைகளை மட்டுமே அடிக்கடி அணிவேன்.
இ) எனக்குப் பிடித்த குறிப்பிட்ட சில நிறங்களில் மட்டும்தான் உடைகளை வாங்குவேன்.
7. கீழே உள்ள மூன்று திரைப்படங்களில் எதன் முடிவை உங்களால் அதிகம் ஏற்றுக் கொள்ள முடிகிறது?
அ) சிந்து பைரவி.
ஆ) அலைகள் ஓய்வதில்லை.
இ) அந்த ஏழு நாட்கள்.
8. ஜீன்ஸ், டி சர்ட் போன்ற உடைகளை பெண்கள் அணிவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அ) தவறு. கலாச்சாரக் கேடு.
ஆ) பொருத்தமாக இருந்தால் அணிந்து கொள்ளட்டுமே.
இ) வரவேற்கிறேன். இது பெண்கள் முன்னேற்றத்திற்கான ஓர் அறிகுறி.


உங்களுக்கான விடைகள்

1, 4 கேள்விகளுக்கு பதில் அ) 3 ஆ) 0 இ) 5
5, 6 கேள்விகளுக்கு பதில் அ) 5 ஆ) 3 இ) 0
3, 8 கேள்விகளுக்கு பதில் அ) 0 ஆ) 3 இ) 5
2ம் கேள்விக்கு பதில் அ) 0 ஆ) 5 இ) 3
7ம் கேள்விக்கு பதில் அ) 3 ஆ) 5 இ) 0

உங்களின் மொத்த மதிப்பெண்கள் 30லிருந்து 40 வரை என்றால்...
எங்கும் புதுமை. எதிலும் புதுமை என்பதில் குறியாக இருக்கிறீர்கள். எதையும் ஏற்றுக் கொள்ளத் தயார் என்பது உங்கள் மனப்பக்குவத்தைக் காட்டுகிறது. ஆனால், புதுமை என்பதற்காகவே ஒன்றை வரவேற்காமல், அது பழசை விடச் சிறப்பானது என்ற முடிவை ஆராய்ந்து எடுத்தால், அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

உங்கள் மொத்த மதிப்பெண்கள் 15லிருந்து 29 வரை என்றால்...
பழையன கழிதலும், புதியன புகுதலும் தவிர்க்க முடியாத மாற்றங்கள் என்பதை உணர்ந்திருக்கிறீர்கள். சிந்தனைக்கு மதிப்பு கொடுக்கும் நேரத்தில் உணர்வுகளின் பிடியில் இருந்தும் உங்களால் விடுபட முடியவில்லை. இதைத் தவறு என்று கூற முடியாதுதான்.

உங்கள் மொத்த மதிப்பெண்கள் 15க்கும் குறைவு என்றால்...
குதிரை என்றால் கடிவாளம் தேவைதான். ஆனால், உங்களுக்கும் கடிவாளம் பிடித்திருக்கிறது எனக்கான பாதை இதுதான். அதில் தெளிவாகப் பயணம் செய்ய பழமை என்ற அனுபவம் வாய்ந்த கடிவாளம் இருக்கட்டுமே என்றால், அது உங்கள் விருப்பம். ஆனால், இருபுறமும் நீங்கள் பார்க்கத் தவறும் காட்சிகளில் உற்சாகமும் மகிழ்வும் அளிக்கும் பலவற்றை மிஸ் பண்ணுகிறீர்கள்.

நன்றி: குங்குமம்

0 Responses to “புதுமையை விரும்புபவரா, நீங்கள்?”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby