Thursday, April 28, 2011

எது தர்மம்?

எல்லா நேரங்களிலும் நாம் வாழ்க்கையை சுமூகமாக எடுத்துச் செல்வது என்பது சற்று சிரமமான காரியம்தான். சில சமயங்களில் கடுமையான சோதனைகளையும் கடந்து தான் வரவேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது அதில் இருந்து யாரும் தப்ப முடியாது. அப்படிப்பட்ட நேரத்தில் நமது அனுபவங்கள் மட்டுமே நமக்கு உறுதுணையாய் நிற்கின்றன.

சவாலான விஷயங்கள் தான் நமக்கு கடுமையான சூழலை உண்டாக்கும் என்று எண்ணிவிடக் கூடாது. எப்படிப்பட்ட சூழலையும் சமாளித்து முன்னேறுவதே அறிவுடமை.

சூழ்நிலையைச் சார்ந்து சிந்திக்கப் பழகிக் கொள்ள வேண்டும். சூழ்நிலையை மாற்றி அமைக்கும் அளவிற்கு திறமையையும், மனப்பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்துவிட்டு, தான் செய்த தவறுகளுக்கெல்லாம் சூழ்நிலையின் மீது பழிபோட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

அறிவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது என்றும் அழியாதது. எப்போதும் மாறாதது. அறிவு என்பது சத்தியமான ஒரு மெய்பொருள். எளிதில் விளங்க முடியாதது என்று சொல்வதைக் காட்டிலும், எல்லாவற்றையும் விளங்க வைப்பது என்று பொருள் கொள்ளலாம்.

நிரந்தரமான ஒரு உண்மை நிஜவாழ்வில் ஒருவருக்கொருவர் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. அது எதனால் ஏற்படுகிறது. ஒருவருக்கு நியாயமாகத் தோன்றும் ஒரு விஷயம், மற்றவருக்கு ஏன் பிரச்சினையாகி விடுகிறது? என்பதை சற்று ஆராய்ந்து பார்ப்போமானால், ஒரு விஷயம் உங்களுக்கே தெளிவாகப் புலப்படும்.

விஷயம் வேறொன்றுமில்லை, இதுதான்.

நிரந்தரமான அந்த உண்மைப்பொருளைப் பற்றி யாரும் சிந்திக்காமல், அவரவர்க்கு சாதகமான சூழ்நிலையைப் பற்றியே சிந்திக்கின்றனர். அதுதான் இந்த பிரச்சினைகளுக்கு காரணம். திருடுபவனுக்கு திருட்டு நல்ல விஷயமாகவும், போலீஸ்காரனுக்கு அது கெட்ட விஷயமாகவும் தெரிகிறது. படிக்கும் மாணவனுக்கு ஊர்சுற்றுவது ஜாலியாகத் தெரிகிறது. பெற்றோருக்கு அவனது போக்கு கவலையைத் தருகிறது.

இதுபோன்ற பல பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக இருப்பது எது என்று சற்றே உள்ளூர சென்று ஆராய்ந்து பார்த்தால், அறிவைப் பயன்படுத்தும் விதம்தான் என்பது புலப்படும்.
அறிவு என்ற அந்த நிரந்தரமான உண்மைப் பொருளை ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு தெரிந்து வைத்துள்ளார்களோ, அந்த அளவை மட்டும் தனது காரியங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். பானையில் ஊற்றிய நீரின் வடிவம் பொருளுக்கேற்ப மாறிக்கொண்டிருப்பதைப் போல, அறிவும் ஒருவருக்கொருவர் மாறிக்கொண்டே இருக்கிறது. அறிவை தன்னுடைய பாதகமான செயல்களை நியாயப்படுத்துவதற்காகத் தேடக்கூடாது. அது ஆரம்பத்தில் பல நன்மைகளைத் தந்தாலும், முடிவில் விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.

நாம் எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நம்மால் கண்டிப்பாக அப்படி செய்யவும் முடியாது. அதற்குப் பதிலாக எந்த உயிர்களுக்கும் தீங்கு எதுவும் செய்யாமல் வாழ்வதே நாம் செய்யும் பெரிய தர்மமாகும்.

0 Responses to “எது தர்மம்?”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby