Friday, April 1, 2011

தேடிச் செல்கிறேன்

அப்பழுக்கற்ற மனம்
எங்கேனும் உளதோ?
ஒரு குறையாய் சொல்லாமலும்
உள்ளக் கிடக்கையாய் வார்த்தைகளை
உள்ளபடியே உதிர்க்க வேண்டும்
என்கிறதே என் உள்ளக்கிடக்கை!


காற்றில் கரையும்
உன் சிரிப்புகளுக்கு எல்லாம்
சொந்தக்காரனாக
நான் மட்டும்
இருக்க வேண்டும்.

நீ
கோபமாய் உதிர்க்கும்
வார்த்தைகள் யாவும்
மலர் மாலையாய்
கோர்க்கும் பக்குவம்
கொண்டேன்.
என் ராதையாய்
நீ வருவாய் என..!

இடைவெளியில்லாத
உன் மூச்சுக்காற்று எல்லாம்
என்னைச் சுற்றியே
நித்தம் வலம் வர வேண்டும்!

உன் பஞ்சு போன்ற மடிமீது
துயில் கொள்ள அனுமதி வேண்டும்
கூடவே ஒரு சிறுவேண்டுகோள்...
நான் பரவசமாய்
தூங்கி விட என் தலைமுடியை
உன் பூவிரல்கள் மென்மையாய்
கோதிவிட வர வேண்டும்!

சுகங்கள் தர வேண்டும் என்ற
வன்முறை நிபந்தனையை
எனக்கு விதிக்கத் தெரியாது!
ஆனால்...
இவை யாவும்
நான் ஏதும் சொல்லாமல்
நீயாக அரங்கேற்ற வேண்டும்
என்ற அதீத ஆசை
எனக்கு எப்போதும் உண்டு!

என் தூண்டுதல்கள் உன்னை
ரணமாக்கினால்...
நான் இப்போதும் கேட்பேன்
பகிரங்கமாய் மன்னித்து விடு என்று!

மாறாக,
நீயாக ஏதேதோ
பொய் சொல்லும் வேளையில்
என் கண்கள்
உன் கண்களுடன்
மோதும் வேளை கோபக்காற்றாய்...
அனல் பறக்கவே செய்யும்!

உனக்கு
என்னைத் திட்டுவதே
வாடிக்கை என்றால்...
அதுவே
உனக்குப் பிடிக்கும் என்றால்...
என்னை சீண்டி நீ சுகம் காண
நான் சம்மதித்தாலும்
எனது சத்துவக்குணம்
ஒருபோதும் அதை
அனுமதிப்பதில்லை..!

நீ யாருடன்
எப்படி பழகுகிறாய்
என்று நான் எப்போதும்
கேட்பதே இல்லை...
ஆனாலும்...
மூச்சுவிடாமல்
பதில் சொல்கிறாயே, ஏன்?

நானும்
ஒரு
சராசரி மனிதன்தான்...
எனக்கும்
எல்லாவித
உணர்வுகளும்
ஆசைகளும்
உண்டு.

கவலைகளை
இடைமறித்து
கற்பனைகளை
மிதக்க விட்டு
வேடிக்கை பார்க்கிறேன்
நீ எனக்கு
கிடைப்பாயா என்று!

என்
உணர்வுகளை
உசுப்பி விட்டு
வேறொருவனுடன்
கும்மாளமா?
மலருக்கு மலர்
தாவும் வண்டிற்கும்
உனக்கும்
என்ன வித்தியாசம்?

கனவுகளும், கற்பனைகளும்
சுகம்தான் என்பதை
நீ அறிவாய்..!
உனக்கு ஒன்று சொல்வேன்
உன் கனவுலகில்
நீ உண்ணும் அறுசுவை உணவால்
உன் பசி தீருமோ?

சொர்க்கத்தின் வாசல்களைத் தேடி
வீதிவீதியாய் அலைகிறேன்...
என்ன செய்வது?

பார்க்கும் இடங்கள் எல்லாம்
கதவுகள் பூட்டிக் கிடக்கிறதே!
இனி எப்போது திறக்கும்?
உன் மனம் என்ற அந்த
இரும்புக்கதவு!

எதில் இல்லை கலப்படம்?
உன் நவரசங்களும்
கலந்ததால் தானே
என்னை உன்னிடத்திலே
பறிகொடுத்தேன்..!
கலப்படம் என்பதை
கசடாக ஒதுக்கி விடாதே!
ஆயகலைகளுக்கும்
அதுவே அச்சாரம்!

கவிதை எழுதி
கதையை சாதிக்கும்
எண்ணம் எனக்கு இல்லை.
உன் நினைவுகளை
பதிவு செய்ய எனக்கு
இதை விட
வேறு வழி தெரியவில்லை!

உருப்படியாய் ஏதாவது செய் என்று
நீ அதட்டும் வேளைகளில்
என் இதயக்கதவுகள்
சூறாவளிக்கு அகப்பட்டாற்போல்
சுழன்று சுழன்று அடிக்கின்றன!

நீ சாப்பிடும்போதும்
நீர் அருந்தும்போதும்
உறங்கும்போதும்
உடை மாற்றும்போதும்
என்னால்
ரகசியமாக பார்க்காமல்
இருக்க முடியவில்லை.
அதனால்
மன்னித்து விடு.

உனக்கு இது தவறாய்
தெரிந்தால்...
அந்த தவறையும் விடச் சொல்
விட்டுவிடுகிறேன்
என் உயிருடன் சேர்த்து!

மழைமுகம் காணா பயிரும்
மண்வாசம் வீசா ஊரும்
நிச்சயமாய் பலன் தருவதில்லை.

ஆனால்,
நான் அப்படியல்ல...
சாதனை செய்வேன் என்று
துணிச்சலாக பொய்சத்தியம்
செய்யத் தெரியாவிட்டாலும்

என்றேனும்
ஒருநாள் அதுவாகவே அரங்கேறும்
என் இதயவீணையாய்
நீ அருகில் இருந்தால்!

நான் ஒன்றும் ராஜாதி ராஜனல்ல!
உன் ஆசைகளை எல்லாம்
நிறைவேற்றி வைப்பேன் என்று
பொய் சபதம் போட!

கவித்துவமான உன் பேச்சில்
ஒலிக்கும் மழலை ராகத்தில்
நான் ஆயுள்கைதியாக-
மாற விரும்புகிறேன்..!

இனியேனும்
என்னை பரிதவிக்கவிட்டு
நீ வேடிக்கைப் பார்ப்பதை
நிறுத்திவிடு!
உன் வாசம்
எனக்கு எப்போதும்
வீச வேண்டும்!

-பாரதிசங்கர்

0 Responses to “தேடிச் செல்கிறேன்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby