Tuesday, January 25, 2011

காதலுக்கு மரியாதை செய்யும் காவலன்

வியாபாரத்திற்காகவே படம் எடுப்பவர்களுக்கு மத்தியில், சமுதாயத்திற்காகவும் படம் எடுப்பவர்கள் மிகச்சிலரே. அவர்களில் ஒருவர் தான் இயக்குநர் சித்திக்.
சினிமா ஊடகத்தை மட்டும் வாழ வைப்பதில்லை. சமுதாயத்தையும் மாற்றி அமைக்க முடியும் என்பதை அவரது படங்களில் உற்று நோக்கினால் தெரியவரும்.


 விளையாட்டாக ஆரம்பிக்கும் காதல் எப்படி வினையாக முடிகிறது என்பதை கதையின் கருவாக கொண்டு படம் முழுவதையும் மெல்லிய காதலை இழையோடச் செய்திருக்கிறார், இயக்குநர் சித்திக். படத்தின் 20 நிமிட கிளைமாக்சில் தனக்கென்று உள்ள இயக்குநர் முத்திரையை அழுத்தமாக பதித்து இருக்கிறார்.
செம்மனூர் கிராமம் முத்துராமலிங்கமாகவே படம் முழுவதும் வாழ்ந்து இருக்கிறார், ராஜ்கிரண். ஒரு காலத்தில் அடிதடி என்று இருந்து திருந்தி வாழும் அவருக்கு, அவரது பரம எதிரியான மகாதேவனால் அவருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
விஜயின் அப்பாவாக நிழல்கள்ரவி கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். தனது மகன் அடிதடிகாரனாக மாறிவிடக்கூடாது என்று, அவனைத் திருத்த சரியான ஆள் முத்துராமலிங்கம்தான் என்று அவரிடமே பாடிகார்டாக அனுப்பி வைக்கிறார்.
தனக்கு பாடிகார்டு யாரும் தேவையில்லை என்று முதலில் விஜயை எதிர்க்கும் ராஜ்கிரண், ஒரு கட்டத்தில் தனக்கு ஆபத்து நேரும்போது காப்பாற்றும் விஜயையும், அவர் தான் பூமிநாதன் என்பதையும் தெரிந்து அவர் மீது நம்பிக்கையும், மரியாதையும் வைக்கிறார்.
அவரை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் பொறுப்பை விஜய் ஏற்றுக் கொள்கிறார். விஜயின் கண்காணிப்பு தன்னையும் தொடர, அசினுக்கு ஆசை. அப்பாவிடம் அவரைப் பற்றி எடுத்துச் சொல்லி தன் ஆசையை நிறைவேற்றுகிறார்.
அவரிடம் தன் காதலை விளையாட்டாக செல்போனில் மாற்றுக்குரலில் பேசி, கலாய்க்கிறார். அதுவே உண்மையான காதலாக மாறிவிடுகிறது. அப்புறம் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. 
காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக படத்திற்கு பிறகு காதலுக்காகவே வாழ்ந்து இருக்கிறார், விஜய். தனது கேரியரில் அழுத்தமான முத்திரை பதித்துள்ளார்.
ராஜ்கிரண் மகள் மீராவாக வரும் அசின் அழகில் மட்டுமின்றி நடிப்பிலும் தூள்கிளப்புகிறார். செல்போனில் அவர் கொஞ்சி கொஞ்சி காதல் மொழி பேசுவது அருமை.
அசினின் தோழியாக வரும் மித்ராகுரியன் தமிழ்சினிமாவிற்கு நல்ல அறிமுகம். அவரது உயிரோட்டமான நடிப்பு படம் பார்ப்பவர்களுக்கு கிளைமாக்சில் தான் தெரிய வருகிறது. 
அப்பா, விஜயை தனக்கு பாடிகார்டாக அனுப்பியவுடன் அவரது முகத்தில் தான் எத்தனை சந்தோஷம். குறுகுறுப்பான காதல் பார்வையை விஜயின் மீது அவருக்கே தெரியாமல் அவ்வப்போது அள்ளி வீசுகிறார். விஜய் மீது உண்மையாக காதல் வயப்படும்போது இனி ஒவ்வொரு நொடியிலும் அவர் என்ன செய்வாரோ என்று சீட்டின் நுனியில் அமர்ந்து எதிர்பார்க்க வைத்து விடுகிறார்.
விஜய்க்கு பூமிநாதன் என்ற பெயரை சூட்டும் விதத்திலும், தன்னைத் தாக்க வரும் ரவுடிகளைத் துவம்சம் செய்வதிலும், தன் மகள் கல்யாணம் கட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் என்பதை விஜயிடம் தெரிவிக்கும்போதும் நடிப்பில் மிளிர்கிறார், ராஜ்கிரண். 

தன்னை சிறுவயதில் காதலித்த அம்முக்குட்டிதான் செல்போன் காதலி என்று தெரிந்ததும், அவர் மீது  விஜய்க்கு உண்டாகும் காதல் தீ நம்  மீதும் பற்றி விடுகிறது. வித்யாசாகர் இசையில் யாரது யாரது பாடல் மட்டும் மனதில் நிற்கிறது.
எங்கள் அண்ணா, பிரண்ட்ஸ் படத்தைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி அடித்திருக்கிறார், மலையாள இயக்குநர் சித்திக்.
காவலன் எல்லோருக்கும் தேவையானவன்.
===


0 Responses to “காதலுக்கு மரியாதை செய்யும் காவலன்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby