Wednesday, December 29, 2010

மன்மதன் அம்பு ரணமா?, ரசமா?

மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய கண்ணோடு கண்ணை கலந்தாலென்றால்.. என்ற பாடல் வரிகள் சர்ச்சைக்குள்ளானது யாவரும் அறிந்ததே. அதே பாடலில் வாழ்க்கைக்கு அவசியமான எத்தனையோ கருத்துக்கள் உள்ளன.


அவை ஏன் நமக்கு தெரியாமல் போய்விடுகிறது. உதாரணமாக, அதே பாடலில், நீதி வேண்டும். நேர்மை வேண்டும். எனக்கென சுதந்திரம் இருக்கும் வேளையில் பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும். மூளை மடிப்புகள் அதிகம் கொண்ட மேதாவிலாச மண்டையும் வேண்டும். மோதிக் கோபம் தீர்த்திட பாறைபதத்தில் நெஞ்சும் வேண்டும் போன்ற உன்னதமான வைரவரிகளை அடையாளம் காணுங்கள்.

நமக்கு படங்களில் நல்லதை மட்டுமே காட்டிக் கொண்டு இருக்க முடியாது. கெட்டது எது என்று தெரியும்போதுதான் நல்லதும் எது என்று தெரியும். அப்படியானால், இரண்டையும் காட்டித்தான் ஆக வேண்டும். இங்கு கெட்ட வரிகள் என்று சொல்லப்படும் வரிகளை இனம் கண்டு கொண்டவர்கள், நல்லவரிகளை ஏன் இனம் காணாமல் விட்டுவிட்டார்கள்.

மற்றொரு பாடலில் என்ன அற்புதமான வரிகள். இதோ பாருங்கள். பூகோளம் பூராவும் புரிகின்ற மொழிதானே காதல்...என்ன ஒரு ரம்மியம்...என்ன இனிமை...நல்ல ரசிகனுக்கு இந்த பாடலின் வரிகள் நல்ல தீனி என்றே சொல்லலாம். படத்தில் வரும் காமெடிகள் அனைத்தும் முற்றிலும் புதுமையானவை. இவை வடிவேலு, செந்தில், கவுண்டமணி, விவேக் போன்றவர்கள் நடித்த காமெடியைப் போல இருக்காது. அதற்கு மாறாக, வெளியில் சொல்லி சிரிக்க முடியாத வகையில் இருப்பதைக் கவனிக்கவும்.

ஏதாவது புதிய முயற்சியைக் கலைஞர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரசிகர்களு-ம் செய்யலாம். அவர்கள் ரசிப்புத்தன்மையை மாற்றி அமைக்கும்போதுதான் அவர்கள், கலைஞர்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து அவர்களுடைய ரசனையுடன் சேர்ந்து லயிக்க முடியும். அவ்வாறு அதை இனம் கண்டு கொள்ளாதவரை அவர்களுக்கு கமல் போன்ற கலைஞர்கள் செய்யும் எது செய்தாலும் போரடிக்கத்தான் செய்யும்.

"வீரத்தின் மறுபக்கமே மன்னிக்கிறதுதான். வீரத்தோட உச்சக்கட்டம் அகிம்சை" என்று திரிஷாவிடம் கமல் குமுறும்போதும், "இந்த உலகத்தை யாரும் யார் காலடியிலும் போட முடியாது. ஏன் பிச்சைக்காரன் காலடியில் கூடத்தான் உலகம் இருக்கு" என்று மாதவனிடம், திரிஷா யதார்த்தமாக பேசும்போதும், "அறம் பேசாதடா..அறம் செய்" என்று நண்பர் ரமேஷ் அரவிந்திடம் பேசும்போதும் கமல் என்ற அந்த உன்னத கலைஞன் வசனத்தில் புதிய பரிணாமத்தைக் காணலாம். எவ்வளவு அழுத்தம், எத்தனை நேர்த்தி என்று அந்த வசனங்களை கூர்ந்து கவனிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்.

ரஜினிகாந்த் அப்படி ரசித்ததால்தான் கமலை கட்டித்தழுவி பாராட்டி இருக்கிறார். இது நட்பைத் தாண்டிய பாராட்டு. வெறும் வார்த்தைகளால் அலங்கரிப்பதல்ல. எந்தவிதமான முகத்துதியும் அல்ல. அதேபோன்று, முதலில் விபத்திற்குள்ளாகும் கார் என்ன ஆனது என்பதைக் காட்டாமல், படத்தின் பிற்பகுதியில் திரிஷா ஓட்டி வந்த கார் தான் அந்த விபத்திற்கு காரணம் என்று முடிச்சு போடுவது திரைக்கதையில் அவர் கையாண்ட புதிய யுக்தியைக் காட்டுகிறது என்பதையும் அடையாளம் காணலாம்.

புதிய தளத்தில் சிந்தித்து தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வேலையை ஒருசிலரால் மட்டுமே செய்ய முடியும். அப்படி செய்யும் கலைஞர்களை, ஊக்கப்படுத்துவது நமது கடமை. முதல் முறையாக படப்பிடிப்பிற்கு முன்னரே ஒத்திகை பார்க்கப்பட்டு எடுக்கப்பட்ட படம். அனைவரும் அவரவர் சொந்தக்குரலிலேயே பேசி நடித்த படம். படத்திற்காக பிரத்யேகமாக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட கப்பலை ரசித்துப் பாருங்கள்.

 மனுஷ்நந்தனின் ரம்மியமான ஒளிப்பதிவையும், தேவிஸ்ரீபிரசாத்தின் இனிமையான பின்னணி இசையும் மனதை எவ்வளவு லேசாக்குகிறது என்பதை உணருங்கள். நீலவானம் என்ற பாடலில் ரிவர்ஸ் காட்சியமைப்பு செய்து புதுமை புகுத்திய படம். இப்படி எத்தனை புதுமைகளை புகுத்தியிருக்கிறார்கள் என்று ரசித்துப் பாருங்கள். ஊக்கப்படுத்துங்கள்.

செல்லும் பாதை எல்லாம் பூக்கள் விழுவதில்லை. கற்களும், முட்களும் கூடிய பாதையிலும் செல்ல வேண்டியது இருக்கும். அதற்காக அந்த பாதையில் செல்ல மாட்டேன் என்று ஒதுங்கி வந்து விடக்கூடாது. ரோஜாவில் தான் முள்ளும் இருக்கிறது. அதற்காக நாம் அதை ரசிக்காமலா இருக்கிறோம்?

விமர்சனத்தைக் கண்டு அஞ்சாதவனே நல்ல கலைஞன். உங்கள் விமர்சகங்கள் கூடுமானவரையில் ஆரோக்கியமாக இருக்கட்டும். வெறும் பொழுதுபோக்கிற்காகவோ, அல்லது கேலிக்கூத்தாகவோ அமைந்துவிடாதவாறு பொறுப்புடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

0 Responses to “மன்மதன் அம்பு ரணமா?, ரசமா?”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby